கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு உற்பத்தித்துறை நிறுவனங்களும் சில சேவை நிறுவனங்களும் சுணக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. அதனை அடுத்து அந்தந்தத் துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் இதனால் அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை முதலிய கடன்களின் மாதத்தவணை தொகையைத் திரும்பச் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவும் விதமாக ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் மாத இறுதியில் 3 மாத காலத்துக்குத் தவணை செலுத்துவதிலிருந்து நீட்டிப்பு அவகாசத்தைக் கொடுத்தது. அதாவது வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் பெறும் மாதாந்திர தவணை தொகைகளை 3 மாதத்துக்கு நிறுத்தி வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது.
அதன்படி, இதனை ஏற்கும் வங்கிகளும் வங்கி சாராத நிதி நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கலாம்; அல்லது வழங்காமலும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த அனுமதியைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தவணை செலுத்துவதிலிருந்து மூன்று மாத கால அவகாசத்தைக் கொடுத்தன.
இதன்படி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத தவணைகளை (வீட்டுக்கடன், வாகனக் கடன், கிரடிட் கார்டு கடன்) செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக குறிப்பிட்ட கடனின் இறுதித் தவணை எப்பொழுது முடிவடைகிறதோ, அந்த மாதத்திலிருந்து கூடுதலாக மூன்று மாதங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். இதனால் வங்கிக்கும்/ வங்கி சாராத நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் பெரிதாகப் பிரச்சனை ஏற்படப்போவதில்லை. சில வங்கிகள் மூன்று மாதங்களுக்கான கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடும்.
தவணை நீட்டிப்பு சலுகையால் மிகப்பெரிய பயன் யாருக்கு என்றால் அது கடன் அட்டைகள் வைத்திருப்போருக்குத்தான். பொதுவாகவே கடன் அட்டை நிறுவனங்கள் ஆண்டுக்கு 40% வட்டியை வசூலிக்கின்றன. இந்த தவணை நீட்டிப்பு சலுகை, கடன் அட்டைகளுக்கும் பொருந்தும் என்பதால் இந்த மூன்று மாதங்களுக்கு அவர்கள் குரல்வளையை கிரடிட் கார்டுகள் நெரிக்காது.
அதேபோல மூன்று மாதங்களுக்கும் சிபில் தரவரிசை அவர்களைப் பாதிக்காது என்பது கூடுதல் அம்சம். ஆனால் நடைமுறையில் ஒரு சிக்கல் வந்தது. ரிசர்வ் வங்கி சலுகையை அறிவித்தது மார்ச் மாத இறுதியில். அதாவது, எல்லோரும் மார்ச் மாத கடன் தவணையைச் செலுத்தியபிறகு. ஏப்ரல் மற்றும் மே முதல் வாரத்தில் வந்த இரண்டு தவணை சலுகைகளை மட்டுமே அவர்களால் அனுபவிக்க முடிந்தது.
தற்பொழுது இன்று (22.05. 2020) காலை ஊடகங்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்தி காந்த தாஸ் அவர்கள், கடன்தாரர்கள் தவணை செலுத்தும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் வீட்டுக்கடன், வாகனக் கடன், கிரடிட் கார்டு கடன்களுக்கான மாதத் தவணைகளிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்க இருக்கிறது. இந்த சலுகை பயன்படுத்துவது சரியா இல்லையா என்று பலருக்கும் குழப்பம் இருக்கிறது.
இது தவணையைத் தள்ளிப்போடும் சலுகைதானே ஒழிய, வட்டியையோ, அல்லது அசலையொ செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கும் சலுகையன்று. அதாவது சிகிச்சையன்று; முதலுதவி மட்டுமே! இருப்பினும் இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் கொஞ்சம் தப்பிக்கலாம்.
எப்படி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது?
எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ.30 லட்சத்துக்கான வீட்டுக்கடன் வாடிக்கையாளர் என்று கொள்வோம். ரூ.1 லட்சத்துக்கான கடன் அட்டை தவணை வைத்திருக்கிறீர்கள். ரூ. 3 லட்சத்துக்கான தனிநபர் கடனும் உங்கள் தலைமேல் இருக்கிறது. வீட்டுக் கடனுக்கு சுமார் 10% வட்டி என்று கொள்ளலாம். தனிநபர் கடனுக்கு 11% முதல் 15% வரை வட்டி செலுத்துவீர்கள். கடன் அட்டைகளுக்கு ஆண்டு வட்டி 40% என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த சூழ்நிலையில் நீங்கள் இந்த சலுகை பயன்படுத்துவதாக இருந்தால் என்ன செய்யலாம்? முதலில் மூன்று நிறுவனங்களுமே இச்சலுகை பயன்படுத்தப் போகிறேன் என்ற விண்ணப்பத்தை அளித்து விடுங்கள் (பின்னாட்களில் தவணைக்காலம் அல்லது வட்டி கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்).
இப்போது ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சுமார் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை. மிச்சமாகும் இந்த காலகட்டத்தில் நீங்கள் கடனை திரும்பச் செலுத்தாததால் சிபில் தரவரிசையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அது ஒரு மிகப்பெரிய ஆறுதல் (உடனே ஓடிப்போய் அடுத்த கடனை வாங்கி விடக்கூடாது).
உங்களிடம் இருக்கும் உங்களிடம் தற்போது சேமிப்பாகத் திரண்டிருக்கும் ரூ.60 ஆயிரம் ரூபாயை எடுத்து உடனடியாக கடன் அட்டை நிலுவையை செலுத்தி விடலாம். இரண்டே மாதங்களில் மொத்த நிலுவையையும் ஒழித்துக்கட்டிவிடலாம். முதல் வேலையாக அந்த அட்டையைக் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அல்லது வங்கிக்கு அனுப்பி விடுங்கள். அட்டையை முடக்குமாறும் தெரிவித்துவிடுங்கள்.
அதன் பிறகு அதிக வட்டியை உங்களிடமிருந்து உறிஞ்சிக் கொண்டிருக்கும் தனிநபர் கடன்/ நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களை அடைப்பதற்கு என்ன வழி என்று பாருங்கள். சில வங்கிகள் கூடுதலாக நம்மிடம் இருக்கும் பணத்தைக் கட்டணம் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்கின்றன. கடன் தொகை சுமையை ஓரளவுக்கு குறைக்க இது உதவும். அப்படிப்பட்ட கடன் ஏதும் நீங்கள் வாங்கி இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அருகில் உள்ள வங்கிகளில் பேசி வீட்டுக் கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவதற்கு என்ன வழி என்று பாருங்கள். இந்த சலுகைக் கா.லத்திலிருந்தாலும் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவது சாத்தியம்தான். குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடனை மாற்றும்போது குறைந்தபட்சம் ரூ. 2 லட்சமாவது உங்களுக்கு மிச்சமாகும் (அதாவது 15 ஆண்டுகள்- ரூ.30 லட்ச கடன் தொகைக்கு என்று கணக்கிட்டால்).
அதேபோல உங்கள் வங்கியில் காலாண்டுக்கான சராசரி இருப்பு வீதத்தைக் கணக்கில் கொண்டு தனிநபர் கடன் தருகிறார்களா என்று பாருங்கள் (ஃபெடரல் வங்கி முதலிய பல்வேறு வங்கிகள் இப்படிக் கடன் தருகின்றன). அப்படித் தருவதாக இருந்தால், அந்த வட்டி வீதம் குறைவானதாக இருந்தால் அந்த தனிநபர் கடனை எடுத்து அதிகமாக வட்டி உள்ள பிற கடன்களை அடைத்துவிடலாம்.
கழுத்தைப் பிடிக்கும் கடன்களை அடைத்து விட்டீர்கள் என்றால் கையில் கொஞ்சம் பணம் மிச்சம் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறேன் பேர்வழி என்று மின்னணு சாதனங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். மாறாக, பல்வேறு துறைகளில் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்றெல்லாம் இருப்பதால் அவசரகால நிதியாக இதை வைத்துக் கொள்ளலாம்.
வெறும் சேமிப்புக் கணக்கில் இதைப் போட்டு வைக்காமல் டெர்ம் டெபாசிட் எனப்படும் வைப்புத் தொகையில் இப்பணத்தைப் போடலாம். ஆண்டுக்கணக்கில் நிலை வைப்பில் போடுவதைக் காட்டிலும் மாதாமாதம் வட்டி தரும் இத்தகைய டெபாசிட்டுகள் உகந்தவை. பொதுவாக 4% வட்டியை (ஆண்டுக்கு) இவை வழங்குகின்றன.
இவை போதாது என நீங்கள் கருதினால் பரஸ்பர நிதிகளின் (mutual funds) பக்கம் திரும்பலாம். அதாவது லிக்விட் ஃபண்ட் மற்றும் ஆர்பிட்ரேஜ் பண்ட ஆகிய திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 5% லாபத்தை அவை தருகின்றன.
அதேநேரத்தில் பங்குச் சந்தையிலோ புதிய தொழில்களில் முதலீடு செய்வதையோ கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். அதேபோல தங்க நகைகளிலும் முதலீடு செய்துவிட வேண்டாம். ஊக வணிகத்தில் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டாம். சரியாகப் பயன்படுத்தினால் இந்த மூன்று மாத கூடுதல் சலுகை என்பது ஒரு வரம் இல்லாவிட்டால் அது மேலும் கூடுதல் சுமைகளை நம்மீது வைத்துவிடும்.
’என்னால் சமாளிக்க முடியும். இந்த கால நீட்டிப்பு சலுகை வேண்டாம்’ என்று சொல்பவராக இருந்தால் எப்போதும்போல தவணைகளைச் செலுத்துங்கள். அது உங்களுக்கு நல்லதையே செய்யும்.
நன்கு சிந்தித்து முடிவெடுங்கள்.