ஊரடங்கு தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. எனவே தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்து இயங்கும் மற்ற சேவை நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு பணியைத் தொடங்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. எனவே ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலை முன்னெடுக்கச் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்னவென்று பார்க்கலாமா?
ஊரடங்குக்குப் பிறகு உங்களது தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் அல்லது தொடங்கியிருக்கிறீர்கள் என்றால் இவை சார்ந்த சில கேள்விகளை உங்களுக்கு நீங்களே முதலில் கேட்டுப் பாருங்கள். நம்முடைய தொழில் சார்ந்து நாம் வைத்திருக்கும் வணிக மாதிரி (business model) சரியானதா? இப்போதைய இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து வருமானம் தருகின்ற ஆற்றல் இந்த வணிக மாதிரிக்கு உள்ளதா என்பதை யோசியுங்கள்.
பின்னர் அவை குறித்த சிறு ஆய்விலும் ஈடுபடுங்கள். பிரச்சனை எதுவும் இல்லையெனில் இதையே தொடருங்கள். ஆனால் இந்த வணிக மாதிரி வேலைக்கு ஆகாது என்று தெரியவந்தால் தாட்சண்யமின்றி அவற்றைத் தவிர்த்துவிட்டு சூழ்நிலைக்கேற்ற வணிக மாதிரியைக் கொண்டு வாருங்கள். இந்த விஷயத்தில் உங்களது துறை சார்ந்த வல்லுநரின் அனுபவ ஆலோசனைகளைக் கேட்டுப்பெறுவதும் நல்லதே.
நிறுவனத்தின் செலவுகளை கூடியமட்டும் புத்திசாலித்தனமாகத் தவிர்க்கப் பாருங்கள். பல்வேறு வகையான பொருட்கள், கருவிகள், உபகரணங்கள் போன்றவற்றின் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இத்தயாரிப்புப் பணிகளை வீட்டில் இருந்து செய்யமுடியாது. ஊழியர்களை நிறுவனங்களுக்கு வரச்சொல்லித்தான் இப்பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஆனால் இதுபோன்று இல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்ளச் சொல்லலாம். இதன்மூலம் ஊழியர்கள் தினசரி அலுவலகம் வந்து வேலை செய்வதால் உண்டாகும் செலவுகளை(ஊழியர்கள் அலுவலகத்தில் பயன்படுத்தும் மின்சாரம், நீர் போன்றவை இதில் அடங்கும்)நிறுவனங்கள் சற்று தவிர்க்க முடியும்.
முடிந்தவரை பயணங்களைத் தவிருங்கள். தகவல் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தி நீங்கள் இருக்கின்ற இடத்துக்கு உங்கள் நிறுவனத்திற்குத் தேவையானதை வரவழையுங்கள். இந்தக் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வர வாய்ப்பிருக்கிறதே தவிர இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள்வரை இது நம்மைவிட்டு முழுமையாக நீங்காது.
எனவே இனி வரும் நாட்களில் உங்களது நிறுவனம் சார்ந்து நடத்தப்படும் சந்திப்புகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஆன்லைனுக்கு மாற்றுங்கள். உங்களது நிறுவனத்தையும், உங்களது நிறுவனத்தை நம்பி வாழ்கின்ற ஊழியர்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதால், உங்களை இனி எப்போதும் பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஊரடங்கு காரணமாக பலநாட்கள் நிறுவனங்கள் செயல்படாததால் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் அந்நிறுவனங்களை நடத்துபவருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இதைச் சரிகட்டுவதற்காக நிறுவனங்கள் தங்களிடம் வேலைசெய்கின்ற ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிப்பதைவிட மற்ற சில மாற்று வழிகளைக் கையாளலாம்.
எடுத்துக்காட்டாக, தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் வேலைவாய்ப்பை வழங்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் முதல் பதினைந்து நாட்கள் வேலைக்கு வரவேண்டும். அடுத்த அணி/குழு ஊழியர்கள் அடுத்த பதினைந்து நாட்கள் பணிக்கு வரவேண்டும் என்பதுபோன்ற சுழற்சி முறையைக் கொண்டுவந்தால், எல்லோருக்கும் ஓரளவுக்கேனும் வேலைவாய்ப்பைக் கொடுக்கமுடியும். இதன்மூலம் உங்கள் வேலைகள் தொய்வின்றி நடப்பதோடு, உங்களையே நம்பியிருக்கும் உங்களது ஊழியர்களின் வாழ்க்கையும் சற்று மேம்படும்.
ஆனால் ஒன்று......உங்களது நிறுவனம் சார்ந்து நீங்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் திடீரென்று உங்களது ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தாதீர்கள். எதன் காரணமாக இந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்கிறீர்கள் என்பதை உங்களது ஊழியர்களுக்கு முறைப்படி அறிவித்துவிட்டு பின்னர் அதனை செயல்படுத்துங்கள். அப்போதுதான் நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான உறவு சரியாக இருக்கும். அடுத்தடுத்த உங்களது செயல்பாடுகளுக்கும் உங்களது ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பர்.
குறிப்பாக உங்களது நிறுவனத்தில் தினசரி ஊதியத்துக்கு வேலை செய்பவர்களை அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களது முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே உங்களது தொழில் தங்குதடையின்றி நடக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஊழியர்களிடம் நீங்கள் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்களது வாடிக்கையாளர்களிடமும் அதே வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியது மிகமிக முக்கியம். இது உங்களது கடமையும் கூட. குறிப்பாக இந்த ஊரடங்கு காரணமாக உங்களது நிறுவனம் சந்தித்துவரும் பிரச்சனைகளை உங்களது வாடிக்கையாளர்களிடம் சீரிய இடைவெளிகளில் கொண்டு செல்லுங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அப்போதுதான் உங்களது இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்துகொள்ளும் உங்களது வாடிக்கையாளர்கள் இப்போதும் உங்கள் பக்கம் நிற்பர்.
அதைவிட்டுவிட்டு நீங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்தவொரு தொடர்பையும் வைத்துக்கொள்ளாமல் திடீரென்று உங்களது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரித்தாலோ அல்லது உங்களது தயாரிப்புக்களில் மாற்றங்களை அறிவித்தாலோ இதன்காரணமாக அவர்களது கடும் அதிருப்தியை நீங்கள் சம்பாதிக்க நேரிடும். இதுவே உங்களது தொழிலில் நீங்கள் வீழ்ச்சியை சந்திக்கவும் காரணமாக அமைந்துவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது ஒருபுறம் என்றால் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்தின் தீவிரம் காரணமாக உங்களது சில வாடிக்கையாளர்கள் உங்களை விட்டு விலகி வேறிடம் கூடச் செல்லலாம். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாளத் தேவையான திறனை வளர்த்துக்கொள்ளவேண்டியதும் மிகமிக அவசியம்.
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே உங்களது தொழில் சார்ந்த மார்க்கெட்டிங் உத்தியில் பல மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். சீனாவின் வூஹான் மாகாணம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்தது அல்லவா? எனவே சீனாவில் இருக்கின்ற “லின் குயிங்க்ஸ்வான்” (Lin Qingxuan) என்கிற அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் வூஹானில் இருக்கின்ற நாற்பது விழுக்காட்டுக்கும் மேலான தனது கடைகளை மூடிவிட்டது. அதற்குப் பதிலாக இந்நிறுவனத்தினர் தங்களது தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகின்ற அழகு ஆலோசகர்களை “wechat” போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி வூஹான் மாகாணத்தில் உள்ள வாடிக்கையாளர்களை ஆன்லைனில் தொடர்புகொள்ளச் செய்தனர்.
அழகு ஆலோசகர்களும் இந்த ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் மக்களிடம் தங்களது நிறுவனத்தின் அழகுத் தயாரிப்புகளை எடுத்துச் செல்ல, அழகுசாதனப் பொருட்களின் விற்பனை அங்கே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் வளர்ச்சி வூஹான் மாகாணத்தில் மட்டும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநூறு விழுக்காடு அதிகரித்திருப்பதாக பிரபல “ஹார்வர்ட் பிஸினஸ் ரிவியூ” (Harvard Business Review ) இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
எனவே அசாதாரண நிலை காரணமாக உங்களது விற்பனை நிலையங்களை மூடவேண்டிய சூழ்நிலை வந்தால் பதட்டமடையாதீர்கள். சமூக ஊடகங்கள் போன்றவற்றில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய வாய்ப்புள்ளதா என்பதைக் கவனியுங்கள். நினைவில் கொள்ளுங்கள். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’.