சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்கிற கனவு நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் ஒருவேளை சுயதொழில் செய்து தோற்றுவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் அந்தக் கனவை வெறும் கனவாகவே பெரும்பாலும் விட்டுவிடுவோம்.
ஆனால் சுயதொழில் செய்யவேண்டும் என்கிற கனவை நனவாக்கி வீட்டிலிருந்தபடியே ’ஆருத்ரா ஹோம் புட்ஸ்’ என்ற பெயரில் உணவு தயாரிக்கத் தேவைப்படும் மாவு மிக்ஸ், பொடி வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த குடும்பத்தலைவியான ஜெயப்பிரியா.
உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான உணவுப்பொருட்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்வதுதான் இவரது தொழிலின் தனித்துவமாக இருக்கிறது.
“நான் பிறந்து வளரந்ததெல்லாம் திருப்பூரில். ஆரோக்கியமான உணவே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட குடும்பம் என்னுடையது. என்னுடைய அத்தை(அப்பாவின் சகோதரி) மிகவும் அருமையாகச் சமைப்பார். அவர் தயாரிக்கும் உணவுகள் சுவையாகவும், உடலுக்குக் கேடு விளைவிக்காதவையாகவும் இருக்கும். அவரைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால் நன்றாகச் சமைக்கும் திறன் எனக்குள் வந்தது.
அதேபோல கல்லூரியில் ’FAMILY AND COMMUNITY SCIENCE’ என்ற பிரிவில்தான் என்னுடைய பட்டப்படிப்பை படித்தேன். அதில் நியூட்ரிஷியன் எனப்படும் ஊட்டச்சத்து குறித்த பாடங்களும் அடக்கம் என்பதால் ஆரோக்கியமான உணவுகள் குறித்த அறிவும், புரிதலும் அங்கேயும் எனக்குக் கிடைத்தது” என்பவர் திருமணம் முடித்தபிறகு கோவைக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்.
“கணவர், குழந்தை, குடும்பம் என்று அதன்பிறகு நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை. ஆனால் ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்குள் ஏற்படுத்தவேண்டும் என்கிற விருப்பமும் என்னைவிட்டு நீங்கவில்லை. எனவே தோழிகள், அக்கம் பக்கத்தினர், உறவுகள் என்று யாரிடம் பேசினாலும் சரி, அவர்களிடம் நம்முடைய பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து நிறையப் பேசுவேன்.
குறிப்பாக எங்கள் வீட்டின் பாரம்பரிய சமையல் என் தோழிகளை மிகவும் ஈர்க்க ஆரம்பித்தன. எனவே முதலில் அவர்கள் கேட்கின்ற அளவுக்கேற்ப சாம்பார் பொடி, குழம்புப் பொடி, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அப்போது இதனைத் தொழிலாக எடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தில் நான் இல்லை.
ஆனால் இந்த அவசர யுகத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்உணவு கிடைக்க வழி செய்யும் பொருட்டு நாம் ஏன் இதையே ஒரு தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது என்று யோசித்தேன்.
என்னுடைய கணவரும், தற்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துவரும் என்னுடைய மகளும் தங்களின் முழு ஆதரவை எனக்கு வழங்க மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆருத்ரா ஹோம் புட்ஸ் உதயமானது” என்று புன்னகைக்கிறார் ஜெயப்பிரியா.
சத்து மாவு, உளுந்து பொடி, சிறுதானிய அடை மிக்ஸ், கரம் மசாலாத்தூள், கொள்ளுப் பொடி, சிறுதானிய தோசை மிக்ஸ், புளி/காரக்குழம்பு பொடி, இட்லி பொடி, சிறுதானிய மாவு, செட்டிநாட்டுக் குழம்பு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி, பிரியாணி பொடி, பருப்பு பொடி, குருமா பொடி, சாம்பார் பொடி, சுக்கு மல்லி காஃபி பொடி என்று பலதரப்பட்ட நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களை ஆர்டரின் பேரில் வீட்டிலிருந்தபடியே தன் கைப்பட தயாரித்துக் கொடுக்கிறார் இவர்.
தோழிகளைத் தவிர, அக்கம் பக்கத்தினர், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் இவர் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.
வாய்வழி விளம்பரங்களைத் தவிர பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களையும் இவர் திறம்படப் பயன்படுத்திக் கொள்கிறார். எந்தவொரு பொருளையும் குறிப்பாக உணவுப் பொருளை வாங்கும்போது அந்தப் பொருள் தரமானதாக இருக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும். எனவே அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு, தான் செய்யும் உணவுத் தொழிலுக்கான FSSAI (Food Safety and Standards Authority of India) எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரச் சான்றிதழையும் இவர் பெற்றிருக்கிறார்.
“வீட்டிலிருந்து தொழில் செய்பவர்களுக்கு குறிப்பாக உணவுத் தொழில் செய்வோர்க்கு இந்தத் தரம் சார்ந்த அங்கீகாரச் சான்றிதழ் மிக அவசியம்” என்கிறார் ஜெயப்பிரியா.
“அப்போதுதான் உங்களது தயாரிப்புக்களின்மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளத் தொடங்குவர். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். அறிந்தவர்கள், தெரிந்தவர்களைத் தாண்டி என்னுடைய தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்தேன்.
எனவே என்னைப் போன்று வீட்டிலிருந்தபடியே ஆடைகள், அணிமணிகள் போன்ற மற்ற பொருட்களை விற்பனை செய்யும் குடும்பத்தலைவிகளுடன் இணைந்து கோவையின் பல்வேறு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஸ்டால்கள் போட ஆரம்பித்தேன்.
அப்படி ஸ்டால் போட அனுமதி கேட்டு அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் சங்கத்தை அணுகும்போது அவர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கீகாரச் சான்றிதழ் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கேட்டார்கள். எனவே வீட்டிலிருந்து தொழில் செய்தாலும் இது போன்ற விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்” என்கிறார் இவர்.
கோவை மாநகரம் தவிர சென்னை, ஹரியானா போன்ற மற்ற இடங்களுக்கும் வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பேரில் இவர் உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கிறார். ஆர்டரின் பேரில் இந்தியா முழுக்கவே பொடி வகைகள், மாவு மிக்ஸ் வகைகளைத் தன்னால் அனுப்பிவைக்கமுடியும் என்கிற இவர் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை தீவிரமாகப் பின்பற்றுகிறார்.
அதாவது அனைத்துப் பொடி, மிக்ஸ் வகைகளையும் எக்கச்சக்கமாக செய்து வைத்துக்கொண்டு அதன்பின்னர் இவர் ஆர்டர்களை எடுப்பதில்லை. வாடிக்கையாளர்களின் ஆர்டர்களைப் பெற்ற பிறகே பொடி வகைகளை பிரெஷ்ஷாகத் தயாரித்துக் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, தன்னைப்போலவே பொடி வகைகள், மாவு மிக்ஸ் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய விரும்பும் பெண்களுக்கு பயிற்சியளிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் ஜெயப்பிரியா.
மணக்கட்டும் தொழில்!
(தொடர்புக்கு: ஜெயப்பிரியா - 9677530284)